Acts 22

1சகோதரர்களே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களை கவனித்துக் கேளுங்கள் என்றான். 2அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:

3நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். 4நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன். 5அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன்.

6அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. 7நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 8அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.

9அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. 10அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார். 11அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.

12அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன், 13என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.

14அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். 15நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய். 16இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

17பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன். 18அவர் என்னைப் பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே, நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாக எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.

19அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும், 20உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். 21அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

22இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள். 23இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது, 24ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிக் கூக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.

25அதன்படி அவர்கள் அவனைக் கயிற்றால் இருகக் கட்டும்போது, பவுல் அருகில் நின்ற நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாக இருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா? என்றான். 26நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.

27இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான். 28ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான். 29அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனைவிட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான்.

பவுலின்மேல் யூதர்களாலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாக அறியவிரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியர்களையும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.

30

Copyright information for TamULB